கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக கட்டணம் வசூல் 36 நோயாளிகளிடம் பணத்தை திரும்ப கொடுத்த மருத்துவமனை

பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் 36 நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனை பணத்தை திரும்ப கொடுத்துள்ளது.

Update: 2021-06-05 16:00 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஜ.பி.எஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூரு கக்கதாசபுராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

இதையடுத்து, அந்த மருத்துவமனையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளிடம் இருந்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நோயாளிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்டகட்டணத்தை உடனடியாக திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி அந்த தனியார் மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் உத்தரவிட்டு இருந்தார். அந்த மருத்துவமனைக்கு எதிராக நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்த 36 நோயாளிகளுக்கு, பணத்தை தனியார் மருத்துமனை திரும்ப கொடுத்துள்ளது.

அதிகபட்சமாக ஒரு நோயாளிக்கு ரூ.1.20 லட்சத்தை திரும்ப கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபோல், மற்ற நோயாளிகளுக்கும் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்