மைசூருவில் மோதலில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் குமாரசாமி வலியுறுத்தல்
மைசூருவில் மோதலில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
மைசூரு மாவட்ட கலெக்டர், மைசூரு மாநகராட்சி கமிஷனர் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது வீதிக்கு வந்துள்ள நிலையில் மாநிலத்தில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மோதல் பகிரங்கமான பிறகும், அதுபற்றி எதுவும் பேசாமல் முதல்-மந்திரி மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் என்ன செய்து கொணடிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கருத்தை கூறி வருகிறார்கள். ஆனால், அரசு மட்டும் மவுனத்தில் உள்ளது. அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் பணியாற்றாமல் இவ்வாறு சண்டை போடுவதை பிற துறை அதிகாரிகளும் பின்பற்றினால் மாநிலத்தின் நிலை என்ன ஆகும்?. அந்த 2 அதிகாரிகளுக்கும் கடிவாளம் போட வேண்டும்.
இல்லாவிட்டால் கர்நாடகத்தின் மானம், மரியாதை தேசிய அளவில் காற்றில் பறக்கக்கூடும். அவ்வாறு நடந்தால் அதற்கு மாநில அரசே பொறுப்பு. மைசூரு, சாம்ராஜ்நகர் கலெக்டர்கள் இடையே மோதல் போக்கு இருந்ததால், சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் 24 பேர் உயிரிழந்தனர். அத்தகைய ஒரு நிலை மைசூருவிலும் ஏற்பட்டுள்ளது.
அப்பாவிகளை பலிகடா ஆகுவதற்கு முன்பு மாநில அரசு விழித்து எழ வேண்டும். அந்த அதிகாரிகள் இடையே பனிப்போர் கடந்த 5 மாதங்களாக நடந்து வருகிறது. அரசு பலவீனமாக இருப்பதால், அதிகாரிகள், "சூப்பர்மேன்"களை போல் நடந்து கொள்கிறார்கள். அதிகாரிகளின் மோதலை அரசு லேசாக எடுத்துக் கொண்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் ரூ.12 கோடி செலவு செய்ததற்கு கணக்கு கொடுக்கவில்லை எனறு மாவட்ட கலெக்டரும், மாவட்ட கலெக்டர் ரூ.42 கோடியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று மாநகராட்சி கமிஷனரும் பரஸ்பரம் குகற்றம்சாட்டியுள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ள தகவல் பகிரங்கமாகியும், அரசு கண்டும் காணாததை போல் செயல்படுவது சரியல்ல. இதன் மர்மம் என்ன?. மாநிலத்தில் அரசு பலவீனமாக உள்ளதோ அல்லது முதல்-மந்திரி பலவீனமாக உள்ளாரோ தெரியவில்லை. இந்த அரசுக்கு மரியாதை உள்ளதா?. இந்த விஷயத்தில் அரசின் மவுனத்தை கண்டு மக்கள் சிரிக்கிறார்கள். அரசுக்கு தைரியம் இருந்தால் அதிகாரிகளுக்கு மோதலுக்கு கடிவாளம் போட வேண்டும். இல்லாவிட்டால் இந்த அரசுக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.