கொரோனாவுக்கு தந்தை இறந்ததால் 2 மகன்கள் ஆதரவின்றி தவித்து வருகிறார்கள்

தாராபுரம் அருகே தாய் ஏற்கனவே இறந்த நிலையில் கொரோனாவுக்கு தந்தை இறந்ததால் 2 மகன்கள் ஆதரவின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-05 15:47 GMT
தாராபுரம்
தாராபுரம் அருகே தாய் ஏற்கனவே இறந்த நிலையில் கொரோனாவுக்கு தந்தை இறந்ததால் 2 மகன்கள் ஆதரவின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார் டிரைவர்
தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது 45.) கார் டிரைவர். இவரது மனைவி கார்த்திகா. இவர்களது  மகன்கள் தரணிஷ் (13)  ரித்விக் (10). இதில் 2-வது மகன் பிறந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகா உடல் நலக்குறைவால் இறந்துள்ளார்.
இதனால் இரு மகன்களையும் செந்தில்குமாரின் மாமியார் தேவி பராமரித்து வந்தார். செந்தில்குமார் டிரைவர் வேலை பார்த்து தன் 2 மகன்களையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார். 
கொரோனாவுக்கு பலி
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் ஆபத்தான நிலையில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் செந்தில்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை  பலனின்றி இறந்தார். 
இதன் காரணமாக 9-ம் வகுப்பு  படிக்கும் தரணீஷ், 5-ம் வகுப்புபடிக்கும் ரித்விக் ஆகிய இருவரின் படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. வயதான பாட்டி தேவியால் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் 2 பேரன்களையும் பராமரித்து படிக்க வைக்க இயலாத சூழ்நிலையில் உள்ளார். 
உதவிக்கரம் நீட்ட கோரிக்கை
கொரோனாவால் தந்தையையும், ஏற்கனவே தாயையும் இழந்து அனாதையாக இருக்கும் 2 சிறுவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண தொகையும், மத்திய அரசுகளின் நிவாரணத் தொகையையும் கிடைக்க மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இவ்விரு மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்து நிவாரணத்தொகையும் கல்வியைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்