வில்லியனூர் அருகே குண்டு வெடித்தது பெண்ணின் கை சிதைந்த பயங்கரம்
வில்லியனூர் அருகே குண்டு வெடித்ததில் இளம்பெண்ணின் கை சிதைந்து போனது.
வில்லியனூர்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த கோர்க்காடு கிராமத்தில் பொறையாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திடலில் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த இருளர் இனத்தினர் குடில் அமைத்து குடியிருக்கின்றனர். இவர்கள் சாலையோரம் உள்ள பழைய பேப்பர், பொருட்களை பொறுக்கி அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு வசிக்கும் சந்திரன் என்பவரது மனைவி செல்லியம்மாள் (வயது 24) நேற்று மாலை மறைவான பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு பையில் சுற்றியவாறு உருண்டையாக மர்மபொருள் கிடந்ததை எடுத்துப் பார்த்தார். ஏதோ பொருளாக இருக்கலாம் என்று நினைத்து எடுத்தவருக்கு அது வித்தியாசமாக தெரிந்ததால் மீண்டும் அந்த இடத்திலேயே வைக்க முயன்றார்.
அப்போது அந்த பையில் இருந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் நிலைகுலைந்து செல்லியம்மாள் அலறியபடியே அந்த இடத்தில் கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது செல்லியம்மாள் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
உடனே அவரை அங்கிருந்து மீட்டு பார்த்ததில் அவரது இடது கை மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை சிதைந்து இருந்தது. முகம் உள்பட உடலில் பல இடங்களிலும் காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.
அப்போது தான் அங்கு குண்டு வெடித்து இருப்பதும் அதில் சிக்கி செல்லியம்மாள் காயமடைந்து இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர். உடனே அவரை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் மங்கலம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது முட்புதரில் மர்மநபர்கள் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்ததும், அதனை செல்லியம்மாள் எடுத்தபோது வெடித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் கிடந்த வெடிகுண்டு துகள்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குண்டு வெடித்து பெண்ணின் கை சிதைந்த சம்பவம் கோர்க்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.