கடந்த ஒரு மாதத்தில் முதல் முறையாக 10 ஆயிரத்துக்கு கீழ் வந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சுகாதாரத்துறை தகவல்
கடந்த ஒரு மாதத்தில் முதல்முறையாக சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 20 வெண்டிலேட்டர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதனை சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சுகாதாரத்துறை செயலாளர் அருணிடம் ஒப்படைத்தார்.
இதேபோல் தனியார் நிறுவனம் வழங்கிய 17 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 25 வெண்டிலேட்டர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ரங்கசாமி ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், தேசிய சுகாதார துறை இயக்கக இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. 1,368 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 8,126 பேர் வீட்டில் தனிமையிலும் சிகிச்சையில் உள்ளனர். 1,215 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு பிறகு முதன்முறையாக நோய் தொற்றில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக வந்துள்ளது. தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் படுக்கைகள் அதிக அளவில் காலியாகவே உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான ஆர்வம் அதிகம் உள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இணையதளம் முன்பதிவு மூலம் குறிப்பிட்ட மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது
நேற்று மாலை நிலவரப்படி 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து முன்பதிவு இடங்களும் முன்பதிவு செய்யாமல் காலியாகவே இருந்தன. தடுப்பூசி கையிருப்பு போதுமானதாக உள்ளது. எனவே 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.