ஊரடங்கில் மேலும் தளர்வுகள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்க ஆலோசித்து வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கொரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார், ஜிப்மர் இயக்குனர் ராகேஷ்குமார் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது கொரோனா பரவல் இறப்பு விகிதம், தடுப்பூசி, ஆக்சிஜன் படுக்கைகள், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து இருப்பு ஆகியவை குறித்து கவர்னர் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களை அவர் பாராட்டினார்.
பின்னர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். புதுச்சேரிக்கு தேவையான தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கருப்பு பூஞ்சை நோய்க்கான மாற்று சிகிச்சை குறித்து ஆராயவும், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.