தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை திடீர் சாவு
காரைக்காலில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை இறந்தது.
காரைக்கால்,
காரைக்கால் சின்னக்கண்ணு செட்டிவீதியை சேர்ந்தவர் கோபி. பாத்திரங்களுக்கு பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு பிறந்து 55 நாட்கள் ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் குழந்தைக்கு காரைக்கால் மதகடி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நலவழித்துறை கிளை அலுவலகத்தில் தடுப்பூசி போட்டனர். குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டால் கொடுக்குமாறு மாத்திரையையும் செவிலியர்கள் கொடுத்துள்ளனர்.
அதேபோல், வீட்டுக்கு கொண்டு சென்றவுடன் குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. கிராமப்புற செவிலியர்கள் கூறியது போல், காய்ச்சல் மாத்திரை புகட்டினர். நேற்று காலை குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததால், திரும்பவும் மாத்திரை கொடுத்தனர்.
இருப்பினும் குழந்தை மயங்கி நிலையிலேயே இருந்தது. இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், நலவழித்துறையில் போட்ட தடுப்பூசியால் தான் குழந்தை இறந்துள்ளது. எனவே போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.