திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

Update: 2021-06-05 13:19 GMT
28 குழந்தை திருமணங்கள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது. அதாவது 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை, 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தை திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணம் ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 28 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். குழந்தை திருமணம் செய்வதால் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும் தாய்-சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமில்லாமல் ரத்தசோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைபட்டு தன்னம்பிக்கை குறைவு போன்றவை ஏற்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான பிரச்சினைகள், கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது.

கடுங்காவல் தண்டனை
கணவன்-மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திருமண தடைச்சட்டம் 2006-ன் படி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்துகொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதை போல 21 வயது நிறைவடையாத ஆண்களை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளி ஆவார்.
அதுமட்டுமில்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், திருமண பதிப்பக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டம்
எடுத்துக்காட்டாக திருமண பத்திரிகை அச்சடிக்கும் அச்சக உரிமையாளர் வயது சான்று சரி பார்க்க வேண்டும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் 1098 மற்றும் 181, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 044 -29896049 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக 
தொலைபேசி எண் 044- 27665595 போன்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். குழந்தை திருமணம் இல்லாத மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் என்று உறுதி கூறுவோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்