வேலூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் சாலைமறியல்
பெண் பழ வியாபாரியை கண்டித்து வேலூரில் தூய்மை பணியாளர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்
அதிகாரிகள் ஆய்வு
வேலூர் மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் அடையாள அட்டை பெற்றவர்கள் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வியாபாரிகள் பலர் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒருசிலர் அருகருகே கடை வைத்துள்ளதாகவும், பொதுமக்கள் கூடுவதால் கொரோனா பரவல் சூழல் உள்ளதாகவும் புகார் எழுந்தது. அதன்படி 2-வது மண்டல சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அருகருகே வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். இந்த நடவடிக்கையின் போது பழ வியாபாரம் செய்த பெண் ஒருவர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்ட மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர் சாந்தகுமாரி, அந்த பெண்ணிடம் தட்டிக் கேட்டார்.
அப்போது அந்த பெண், சாந்தகுமாரியையும் தரக்குறைவாக பேசி, தாக்கியதாக தெரிகிறது. அங்கிருந்த மற்ற தூய்மை பணியாளர்களும் ஒன்றிணைந்து இதுகுறித்து கேட்டபோது, அவர்களையும் அந்த பெண் மிரட்டல் தொணியில் பேசினார்.
சாலைமறியல்
இதையடுத்து அந்த பெண் பழ வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பழைய மீன்மார்க்கெட் அருகே அண்ணாசாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு மற்றும் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வடக்கு போலீசில் புகார் மனு அளித்தனர்.