திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து; மின்தடையால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், இலுப்பூர் போன்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2021-06-05 12:50 GMT
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து மின்வினியோகம் தடைபட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அந்த ்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அவதியுற்றனர். இதுகுறித்து பொது மக்கள் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி. ஜி.ராஜேந்திரனிடம் தீர்வு கண்டு மின்சார வினியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் மணவாள நகர் துணை மின் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் தீ விபத்தினால் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை புதிதாக விரைந்து மாற்றி தடையில்லா மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரசாத், செயற் பொறியாளர் கனகராஜன், திருவள்ளூர் நகர தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஜானகிராமன், உதவி மின் பொறியாளர்கள் கஜேந்திரன், தட்சிணாமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர்கள் மோகனசுந்தரம், பவளவண்ணன், கொப்பூர் திலிப்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்