பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக்கோரி கொலை வழக்கு கைதி உண்ணாவிரதம்
பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக்கோரி கொலை வழக்கு கைதி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சையை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் கைதான நிஜாம் அலி (வயது 33) என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அவர், தன்னை இங்கிருந்து வேறு ஏதாவது மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 31-ந் தேதி முதல் உணவு எதுவும் அருந்தாமல் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பூந்தமல்லி கிளை சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து அவரது உடல் நலம் எப்படி உள்ளது? என்பதை சோதனை செய்ய போலீசார் நிஜாம் அலியை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நிஜாம் அலி நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனைபடி நிஜாம் அலியை மீண்டும் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் கொண்டு வந்து அடைத்தனர்.