கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் புகார் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் புகார் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

Update: 2021-06-05 11:07 GMT
கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் புகார் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
கராத்தே மாஸ்டர்
சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே மாஸ்டராக பணிபுரிந்து, அதன்பிறகு தற்போது அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் அவர், தான் பள்ளி மாணவியாக இருந்தபோது கராத்தே பயிற்சியின் போதும், விளையாட்டு போட்டிகளுக்கு தன்னை வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் போதும் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புகார் அளித்திருந்தார். மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் அளித்ததால் கராத்தே மாஸ்டர் கெபிராஜை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கெபிராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்ததால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என டி.ஜி.பி.க்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பரிந்துரை செய்தார்.
இதனை டி.ஜி.பி. திரிபாதி ஏற்றுக்கொண்டு கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீதான பாலியல் புகார் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு தொடர்பாக இனி சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்