கொரோனா தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்த 9 நிறுவனங்களையும் நிராகரித்த மும்பை மாநகராட்சி; ‘ஸ்புட்னிக்’ மருந்தை வாங்க பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசி மருந்து சப்ளை செய்ய விருப்பம் தெரிவித்த 9 நிறுவனங்களையும் மும்பை மாநகராட்சி நிராகரித்து உள்ளது. ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Update: 2021-06-05 09:42 GMT
உலகளாவிய டெண்டர்
மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளபோதும், போதிய மருந்து இல்லாததால் அவர்கள் தடுப்பூசி போட முடியாத நிலையில் உள்ளனர். இந்தநிலையில் மும்பை மாநகராட்சி மத்திய அரசை எதிர்பார்க்காமல் கடந்த மாதம் 12-ந் தேதி 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குவதற்கான உலகளாவிய டெண்டரை கோரியது.இந்த டெண்டருக்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்க 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மொத்தம் 10 நிறுவனங்கள் மும்பைக்கு 
கொரோனா தடுப்பு மருந்து வினியோகிக்க விருப்பம் தெரிவித்து இருந்தன. இதில் ஒரு நிறுவனம் விருப்பத்தை திரும்ப பெற்று கொண்டது.

நிராகரிப்பு
இதையடுத்து மாநகராட்சி, 9 நிறுவனங்கள் மருந்து சப்ளை செய்ய விருப்பம் தெரிவித்து சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்தது. இதில் போதிய தகவல்களுடன் ஆவணங்கள் இல்லை என கூறி விருப்பம் தெரிவித்த 9 நிறுவனங்களையும் மாநகராட்சி அதிரடியாக நிராகரித்து உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் எந்த சப்ளையரும் தகுதி பெறவில்லை. கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கும், சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு இடையே உள்ள தொழில்முறை உறவை ஆய்வு செய்வது முக்கியமானதாகும். குறித்த நேரத்தில் மருந்து சப்ளை செய்தல், டோஸ்களை வழங்க எடுத்துக்கொள்ளும் காலம், அளவு, விலை மற்றும் பணம் செலுத்துதலில் உள்ள நிபந்தனைகள் ஆகிய 4 முக்கிய விஷயங்களை வைத்து சப்ளை நிறுவனங்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து 9 நிறுவனங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்புட்னிக் வாங்க பேச்சுவார்த்தை
இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்துடன் பேசினர். அப்போது அந்த மருந்து நிறுவனம் சோதனை அடிப்படையில் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பு மருந்தை இந்த மாத இறுதியில் வழங்குவதாக தெரிவித்து உள்ளது. ‘ஸ்புட்னிக்’ மருந்தை குளிர்ந்த பெட்டகத்தில் வைத்து பாதுகாக்க வித்தியாசமான வழிகளை கையாள வேண்டும். எனவே அந்த மருந்தை பெற்ற பிறகு குளிர்ந்த பெட்டகத்தில் வைத்து சோதனை செய்யப்படும்.ரெட்டிஸ் நிறுவனத்துடனான அடுத்தகட்ட பேச்சு வார்த்தை 8 அல்லது 10 நாட்களில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்