தம்மம்பட்டி அருகே கருப்பு பூஞ்சைக்கு வங்கி ஊழியர் பலி

தம்மம்பட்டி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு வங்கி ஊழியர் பலியானார்.

Update: 2021-06-04 23:46 GMT
சேலம்:
தம்மம்பட்டி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு வங்கி ஊழியர் பலியானார்.
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை  100-க்கும் மேற்பட்ேடாருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளது.
வங்கி ஊழியர்
தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரகவுதம் (வயது 29). மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த வாரம் திடீரென்று கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்