மதுரையில் ஒரே நாளில் 1,559 பேர் குணம் அடைந்தனர்

மதுரையில் ஒரே நாளில் 1559 பேர் குணம் அடைந்தனர். புதிதாக 481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-04 23:37 GMT
மதுரை, 
மதுரையில் ஒரே நாளில் 1,559 பேர் குணம் அடைந்தனர். புதிதாக 481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரே நாளில் 1500 -க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதற்கிடையே, அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி மதுரையில் நேற்று ஒரே நாளில் 481 பேருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு செய்யப்பட்ட பரிசோத னையில் தான் 481 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை போல் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதன்படி மதுரையில் நேற்று ஒரே நாளில் 1559 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு உள்ளன. 
கண்காணிப்பு
இவர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மதுரையில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 67 ஆயிரத்து 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 52 ஆயிரத்து 963 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது 13 ஆயிரத்து 141 பேர் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கண்காணிப்பு மையங்கள், வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கிறார்கள். 
5 பேர் பலி
இதுபோல் நேற்று ஒரே நாளில் மதுரையில் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள். 58 வயது ஆண்கள் 2 பேர், 69 வயது மூதாட்டி, 70 வயது மூதாட்டி, 83 வயது முதியவர் என 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 948 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்