சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா-20 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 20 பேர் பலியாகினர்.

Update: 2021-06-04 22:55 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 20 பேர் பலியாகினர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,253 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 330 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, கோவை, சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 100 பேருக்கு தொற்று உறுதியானது.
70 ஆயிரத்தை தாண்டியது
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 722 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 10 ஆயிரத்து 193 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 பேர் பலி
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 1,064 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்