திண்டுக்கல் சரகத்தின் முதல் பெண் டி.ஐ.ஜி.யாக விஜயகுமாரி பதவி ஏற்பு

திண்டுக்கல் சரகத்தின் முதல் பெண் போலீஸ் டி.ஐ.ஜி.யாக விஜயகுமாரி பதவிஏற்றார்.கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.;

Update: 2021-06-04 21:12 GMT
திண்டுக்கல்: 


முதல் பெண் டி.ஐ.ஜி. 
திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த முத்துசாமி, கோவை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஐ.ஜி. விஜயகுமாரி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

 அதன்படி திண்டுக்கல் சரகத்தின் 18-வது போலீஸ் டி.ஐ.ஜி.யாக விஜயகுமாரி நேற்று பதவி ஏற்றார்.

இவர், திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் போலீஸ் டி.ஐ.ஜி. என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சொந்த ஊர் திருச்சி ஆகும். இவர் கடந்த 1997-ம் ஆண்டு சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார்.

 இதையடுத்து 2006-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும், 2018-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாகவும் பதவி உயர்வு பெற்றார்.


இதனால் சென்னை மாநகர இணை கமிஷனராக பணியாற்றினார். அதன்பின்னர் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி தற்போது திண்டுக்கல் சரகத்தின் டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்றுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாவட்ட நீதிபதி ஜமுனா என முக்கிய பதவிகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் டி.ஐ.ஜி.யாக விஜயகுமாரி பதவி ஏற்றுள்ளார். 

இதனால் மாவட்டத்தின் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் சரகத்தின் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி கூறுகையில், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். 

அதேபோல் கட்டப்பஞ்சாயத்து உள்பட அனைத்து குற்றங்களையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தற்போது இல்லை. 

எனினும், மலைப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு அதிகரிக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய கவனம் செலுத்தப்படும். 

மேலும் தற்போது கொரோனா காலமாக இருப்பதால், கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், உதவுவதும் போலீசாரின் முக்கிய பணியாக இருக்கும், என்றார்.

மேலும் செய்திகள்