கொரோனா பரிசோதனைக்கு வந்தவருக்கு கருப்பு பூஞ்சை

தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனைக்கு வந்த திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு தெரியவந்தது.

Update: 2021-06-04 21:07 GMT
திண்டுக்கல்: 

கருப்பு பூஞ்சை
உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவதே பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கிடையே கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களை, கருப்பு பூஞ்சை எனும் நோய் தாக்குவதாக பரவிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. 

அதன்படி தமிழகத்தில் 400 பேரை கருப்பு பூஞ்சை நோய் பாதித்துள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் என்ற போதிலும், கொரோனா தொற்று ஏற்படாத ஒருசிலரையும் கருப்பு பூஞ்சை பாதித்து இருக்கிறது. 

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் 3 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஆவர்.

பரிசோதனைக்கு வந்தவருக்கு தொற்று 
இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 55 வயதுக்கு ஆணுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையான காய்ச்சல் இருந்தது. இதனால் கொரோனா தொற்றாக இருக்கலாம் என்று அவர் அச்சம் அடைந்தார்.

 இதையடுத்து அவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

மேலும் அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்ததால் டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்போது அவரை பரிசோதனை செய்ததில் கண்ணில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்ததை டாக்டர் கண்டறிந்தார். இதையடுத்து அவர் கருப்பு பூஞ்சை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்