லாரியில் மது கடத்திய டிரைவர் கைது

மதுரைக்கு லாரியில் மது கடத்திய டிரைவர், தவிட்டுப்பாளையம் சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டார

Update: 2021-06-04 21:01 GMT
நொய்யல்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், வெளி மாநிலங்களில் இருந்து மது கடத்தி வருவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்துவதோடு கடுமையான நடவடிக்கைளும் எடுத்து வருகின்றனர்.
லாரியில் மது கடத்தல்
இந்தநிலையில், பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி செல்லும் கன்டெய்னர் லாரி ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் தலைமையிலான போலீசார் தவிட்டுப்பாளையம்  சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு செல்ல அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.
 அப்போது அந்த லாரிக்குள் 120 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சத்தியவேல் என்பவருக்கு சொந்தமான லாரியில் அங்கிருந்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தியதாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாரி மற்றும் 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்