மர்ம நோய் தாக்கி 22 ஆடுகள் பலி

திண்டுக்கல் அருகே மர்மநோய் தாக்கி 22 ஆடுகள் பலியாகின.;

Update: 2021-06-04 20:54 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவர் 120 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை ஊர் ஊராக அழைத்து சென்று விவசாய நிலங்களில் கிடை போடுவது வழக்கம். 

அதுபோல் பொன்னிமாந்துறை தாமரைக்குளத்தில் ஜேசுராஜ் தோட்டத்தில் அவர் கிடை போட்டிருந்தார். அந்த தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முத்துச்செல்வம் தங்கினார். 

பின்னர் நேற்று காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது 22 ஆட்டு குட்டிகளை கிடையில் அடைத்து சென்றார். மாலையில் திரும்பி வந்தபோது 22 ஆட்டுக் குட்டிகளும் இறந்து கிடப்பதை பார்த்து பதறி போனார். 

இதுகுறித்து தகவலறிந்த பொன்னிமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஒரே நேரத்தில் இறந்த 22 ஆட்டு குட்டிகள் ஏதோ மர்ம நோய் தாக்கி இருக்கலாம். 

அவற்றின் உடலை பரிசோதனை செய்த பின்னர் தான் இறந்ததற்கான முழு விவரம் தெரியவரும் என்று கால்நடை டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும் செய்திகள்