ஈரோடு பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 110 குடும்பத்தினருக்கு காய்கறி- மளிகை பொருட்கள்
ஈரோடு பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 110 குடும்பத்தினருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
ஈரோடு
ஈரோடு பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 110 குடும்பத்தினருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்குள்ளவர்கள் வெளியே செல்ல முடியாதபடியும், வெளி நபர்கள் உள்ளே செல்ல முடியாதபடியும் தடுப்புகள் கட்டப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியானதால், அங்கு பால், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்க யாரும் வருவதில்லை. இங்குள்ளவர்கள் மருந்து வாங்கக்கூட வெளியே செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய, மாநகராட்சி ஊழியர்களிடம் கோரியும், தீர்வு கிட்டவில்லை. இதனால் கடந்த 2-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காய்கறி - மளிகை பொருட்கள்
இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து, நடமாடும் வாகனம் மூலம் அவர்களுக்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை அங்கு சென்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அங்குள்ள 110 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்.
தனிமை பகுதியாக பிரித்து, கட்டைகள் கட்டும்போதே, அங்குள்ளவர்களுக்கு தேவையான பால், காய்கறி, மளிகை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.