ஊருணியில் குதித்து மூதாட்டி தற்கொலை
மூலைக்கரைப்பட்டியில் ஊருணியில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி கஸ்பா காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் பாப்பா மனைவி தங்கம் (வயது 80). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். கணவரும், மூத்த மகனும் இறந்து விட்டனர். இளைய மகனும், மகளும் மூலைக்கரைப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தங்கம் தனியாக வசித்து வந்தார். மகனும், மகளும் உணவு கொடுத்து வந்தனர். நேற்று முன்தினம் தங்கம் திடீரென காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினார்கள்.
இந்நிலையில் நேற்று காலை மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஊருணியில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஊருணியில் இறந்து கிடந்தது தங்கம் என்பதும், முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு அவதியுற்ற நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து ஊருணியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.