2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை; தாய் தற்கொலை
சாத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர்,-
சாத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம்பெண்-குழந்தைகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 31).
இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஷ் (2).
சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கரநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணற்றில் வீசி கொலை
அதன்பின்பு செல்வி அதே கிராமத்தில் தனது தாயார் வீரலட்சுமியின் (60) வீட்டின் அருகே வேறு ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார்.
கணவர் தற்கொலைக்கு பின்னர், செல்வி மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை செல்வி தனது நகைகளை எல்லாம் கழற்றி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய தாய் வீரலட்சுமி எதற்காக நகையை எல்லாம் கழற்றுகிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு செல்வி, “சும்மா தான் கழற்றி வைக்கிறேன்” என கூறி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஊரை அடுத்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றார்.
பின்னர் மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் மகனையும், மகளையும் கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். கிணற்றில் குழந்தைகள் தத்தளித்ததும், செல்வியும் குதித்தார். பின்னர் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
உடல்கள் மீட்பு
இதற்கிடையே தனது மகளும், பேரக்குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் வீரலட்சுமி அருகில் உள்ள இடங்களில் எல்லாம் தேடி உள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்வி, தனது குழந்தைகளுடன் காட்டுப்பகுதியை நோக்கி சென்றதாக தெரிவித்தனர். பின்னர் வீரலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தேடிப்பார்த்த போது, கிணற்றில் செல்வியும், குழந்தை அனுஷ்காவும் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சாத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்களும், சாத்தூர் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
செல்வி, அனுஷ்கா உடல்களை மீட்டனர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பின் மாதேஷ் உடலும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கணவர் இறந்த வேதனையில் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று செல்வி தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
இதுகுறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரின் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.