காட்டு யானை தாக்கி காவலாளி பலி
வால்பாறையில் பங்களாவுக்குள் காட்டு யானை நுழைந்தது. அதை துரத்தியபோது அந்த காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
வால்பாறை
வால்பாறையில் பங்களாவுக்குள் காட்டு யானை நுழைந்தது. அதை துரத்தியபோது அந்த காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
காவலாளி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 65). இவர் இதே எஸ்டேட் பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது அதே எஸ்டேட் பகுதியில் உள்ள டென்னிஸ் கோர்ட் பங்களாவில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மாணிக்கம் இரவில் வேலைக்கு சென்றார். வழக்கமாக அவர் காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம். ஆனால் காலை 7 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
காட்டு யானை தாக்கி பலி
இதனால் அவருடைய மனைவி பூங்காவனம், மாணிக்கத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், மாணிக்கம் வேலை செய்து வரும் பங்களாவுக்கு சென்றார். அப்போது அவர் அங்கு இல்லை.
உடனே அவரை தேடியபோது பங்களாவுக்கு வெளியே தோட்ட பகுதியில் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரை காட்டு யானை தாக்கி கொன்றது தெரியவந்தது.
வனத்துறையினர் கண்காணிப்பு
இது குறித்து தகவல் அறிந்த காடாம்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தகவல் தெரிவிக்க வேண்டும்
வால்பாறை பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. காவலாளி மாணிக்கம், வேலை செய்து வரும் பங்களாவுக்குள் உள்ள வாழைகளை சாப்பிட ஒற்றை யானை வந்து உள்ளது.
அதை அவர் துரத்த முயன்றபோது, அது அவரை தாக்கி இருக்கிறது. எனவே வால்பாறை பகுதியில் இரவு நேர வேலைக்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் அவற்றை துரத்தக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.