குண்டும் குழியுமாக உள்ள தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்
முத்தூர் அருகே வள்ளியரச்சலில் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
முத்தூர்,
முத்தூர் அருகே வள்ளியரச்சலில் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தார்ச்சாலை
திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் மாந்தீஸ்வரர் கோவில் தென்புறத்தில் இருந்து தென்னங்கரைப்பாளையம் வரை செல்வதற்கு ஒரு தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார்ச்சாலை கடந்த காலங்களில் பெய்த மழையால் மிகவும் அரிக்கப்பட்டும் அதிக போக்குவரத்து காரணமாகவும் தற்போதுவரை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பழுதடைந்தது காணப்படுகிறது.
மேலும் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை தார்ச்சாலையே தெரியாத அளவிற்கு மண் சாலையாக மாறிவிட்டது.
விபத்து அபாயம்
இந்த பழுதடைந்துள்ள தார்ச்சாலையின் வழியே லாரி, டெம்போ, கார், மினி ஆட்டோ ஆகிய கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை இருசக்கர வாகனங்களிலும், டிராக்டர் உள்பட கனரக வாகனங்களிலும் இந்த தார்ச்சாலையை கடந்து கொண்டு சென்று வருகின்றனர்.
மேலும் இந்த சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிக அளவில் மண்டி காணப்படுகிறது. இதனால் சாலையின் இருபுறமும் புதர்கள் மூடிய நிலையில் மிகவும் குறுகலான சாலையாக தற்போது மாறிவிட்டது. எனவே இந்த இடத்தை எதிர் எதிரே கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
வாகன ஓட்டிகள் அச்சம்
மேலும் இந்த தார்ச்சாலையை கடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் வாகனங்களை சீராக ஓட்ட முடியாமல் அடிக்கடி சிறுசிறு விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும், பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் சென்று வருவதை காணமுடிகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் இந்த சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை வெட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றி பழுதடைந்துள்ள குண்டும் குழியுமான தார்ச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.