காய்கறி, மளிகை, பழங்கள் அதிக விலைக்கு விற்பனை
ஊட்டியில் காய்கறி, மளிகை, பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டியில் காய்கறி, மளிகை, பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர்.
வாகனங்கள் மூலம்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்ய வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
அதன்படி வியாபாரிகள் வாகனங்கள் மூலம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை பட்டியல்
ஊட்டியில் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறி, பழங்களுக்கான விலைப்பட்டியல் பல வாகனங்களில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டப்படவில்லை.
தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விலைப்பட்டியலை ஒட்ட வேண்டும் என்று தெரிவித்தும், பலர் ஒட்டாமல் இருப்பதுடன் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலையில் விற்றால் தங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடுத்தர மக்கள் பாதிப்பு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு முன்னர் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.230 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.120, மாம்பழம் ரூ.100 என பழங்களின் விலை உயர்ந்து உள்ளது.
ஊட்டியில் கிடைக்கும் கேரட் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே வந்து வாங்க முடியாது என்பதால் ரூ.60-க்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு கறிவேப்பிலை ரூ.10, கொத்தமல்லி ரூ.20, கீரை வகைகள் ரூ.15-ல் இருந்து 2 மடங்காக அதிகரித்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உரிய நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஊட்டி வட்டாரத்தில் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்த 3 வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது.
மேலும் பல வாகனங்களில் விலைப்பட்டியல் இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அவதி அடைந்து உள்ளோம். எனவே அதிகாரிகள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.