தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசு தடுமாறுகிறது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசு ஆரம்பம் முதலிலேயே தடுமாறி வருகிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்தார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, சப்-கலெக்டர் மதுபாலனை நேரில் சந்தித்து தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க கோரி மனு ஒன்றை கொடுத்தார்.
அதன்பிறகு, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச தடுப்பூசி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்தியா போன்ற மிகப்பெரிய தேசத்தில் அரசு தான் தடுப்பூசி விஷயத்தில் இலவசத்தை பின்பற்ற வேண்டும். மக்களை அலைக்கழிக்க கூடாது.
தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசு ஆரம்பம் முதலிலேயே தடுமாறி வருகிறது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு ஏற்றது முதல் இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, கடுமையாகவும் உழைத்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 8 கோடி பேரில், இதுவரை 85 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அரசு போட தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்த நிலை தான் தற்போது நாடு முழுவதும் உள்ளது.
பிளஸ்-2 தேர்வு
பிளஸ்-2 பொது தேர்வு ரத்து செய்வது சரியில்லை, மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது பற்றி மாநில, மத்திய அரசுகள், கல்வியாளர்கள் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.
ஓராண்டு கல்வி பாதிக்கப்பட்டால், வேலை தேடும் சந்தையில் அவர்கள் பின்தங்கி போய்விடுவார்கள். பிற மாநில மாணவர்கள் முந்திக் கொள்வார்கள். எனவே மாணவர்களுக்கு வீடுகள் அல்லது ஏதேனும் ஒரு அளவுகோல் வைத்து அமரவைத்து தேர்வு நடத்தலாம். அரசாங்கத்தால் முடியாதது எதுவுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் திலகர், மாநில பொது செயலாளர் சேரன், மாநில செயலாளர் சித்தார்த்தன், விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.