கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் மசினகுடி, முதுமலை, தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள், மான்கள் அதிகளவில் காணப்படுவது வழக்கம். அவற்றை பிற இடங்களில் சொற்ப அளவிலேயே காண முடியும்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி, ஒன்னதலை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பறவையான மயில்களின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முழு ஊரடங்கால் சாலைகள் மற்றும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது.
இதனால் மயில்கள் சுதந்திரமாக இரை தேடி உலா வருகின்றன. எவ்வித அச்சமும் இன்றி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால், அவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிக்கின்றனர். இது தவிர மஞ்சூர், குந்தா ஆகிய பகுதிகளிலும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.