உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட பயனாளிகள் 214 பேருக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கிரண்குராலா தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட பயனாளிகள் 214 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
100 நாட்களில் தீர்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 15 ஆயிரத்து 880 மனுக்களில் முதல் கட்டமாக வருவாய்த்துறையின் கீழ் வீட்டு மனைப்பட்டா, முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை, பட்டா மாற்றம், வாரிசு சான்று மற்றும் நத்தம் சிட்டா நகல் உட்பட 149 இனங்களுக்கு ரூ.16 லட்சத்து 46 ஆயிரத்து 240 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி துறையின் கீழ் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடு 15 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி
சிறு பாலம் அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல், சிமெண்ட் கால்வாய் அமைத்தல், சமூதாய கிணறு வெட்டுதல், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல் மற்றும் உயர்மின்கோபுரம் அமைத்தல், அங்கன்வாடி அமைத்தல் ஆகிய 42 பணிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. இந்த பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டுவரப்படும்.
மேலும் சமூக நலத்துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஒரு நபருக்கு ரூ.97 ஆயிரத்து 719 மதிப்பிலான நலத்திட்ட உதவியும், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறையிலன் மூலம் 5 பேருக்கு ரூ.22 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச சலவைப்பெட்டி ஆக மொத்தம் 214 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 24 லட்சத்து 8 ஆயிரத்தி 179 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.