கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை; தேனி வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2021-06-04 17:04 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.
உரம் இருப்பு
தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை நீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளன. யூரியா 1,170 டன், டி.ஏ.பி. 393 டன், பொட்டாஷ் 728 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2 ஆயிரத்து 114 டன் இருப்பில் உள்ளது. அத்துடன் 603 டன் யூரியா தேனிக்கு வந்துள்ளது. அவை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளபோதிலும் விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க அனைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்கப்பட்டு வருகின்றன.
புகார் தெரிவிக்கலாம்
மேலும் விவசாயிகள் உரம் வாங்கும்போது மூட்டையில் குறிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் பணம் கொடுக்கத் தேவையில்லை. அவ்வாறு அதிகபட்ச விலைக்கு மேல் உரம் விற்பனை செய்யும் உர விற்பனையாளர்கள் மற்றும் உரம் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தால் அதுகுறித்து 83001 08666 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரம் வாங்கும் விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவிகளில் கைரேகை வைக்காமல் தங்களுடைய செல்போனில் பெறப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை காண்பித்து ரசீது பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்