தேனி மாவட்டத்தில் பரவலாக மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தேனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை
தேனி:
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தேனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை
பலத்த மழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்திலும் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்றாற்போல் தேனி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. இதற்கிடையே மதியம் 1 மணிக்கு பிறகு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
தேனியில் பெய்த பலத்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அதன்படி, தேனி என்.ஆர்.டி.நகர், காந்திஜி சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குளம்போல் தேங்கியது. இதனால் சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
வீடுகளுக்குள் தண்ணீர்
தேனி பங்களாமேட்டில், ராஜவாய்க்கால் கரையோரம் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழைநீரும், வாய்க்காலில் தேங்கிக்கிடந்த சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் சிரமம் அடைந்தனர். ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்தாலே ராஜவாய்க்காலில் சேரும் தண்ணீர் செல்ல வழியின்றி கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. எனவே ராஜவாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.