அனைத்து விவசாயிகளுக்கும் புதிய மண்வள அட்டை வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
சம்பாசாகுபடிக்கு முன்னதாக அனைத்து விவசாயிகளுக்கும் புதிய மண்வள அடடை வழங்கப்பட உள்ளதாக மாவட்டவேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தெரிவித்தார்.
சங்கராபுரம்
மண்மாதிரி சேகரிப்பு முகாம்
சங்கராபுரம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் மேலப்பட்டு கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கான செயல் விளக்க முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுந்தரம் தலைமை தாங்கி மண் பரிசோதனைக்கான அவசியம் பற்றி விவசாயிக்கு செயல் விளக்கம் அளித்தார்.
பின்னர் அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-
மண்பரி சோதனை
விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரமான விளங்குவது செழுமையான மண்ணாகும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து, அதற்கேற்ப உரங்களை இட வேண்டும். மண்ணில் உள்ள கார, அமில மற்றும் உப்பின் தன்மை, அடிப்படை சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வழங்கப்படும். சம்பா சாகுபடிக்கு முன்னர் அனைத்து விவசாயிகளும் தங்களின் புதிய மண்வள அட்டையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் கட்டாயம் மண் பரிசோதனை மேற்கொண்டு, வரும் பருவங்களில் அதிக மகசூலை பெறலாம் என்றார்.
இதில் சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகமதுநாசர், ஆரோக்கியசாமி, பழனிவேல், செல்வகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.