கர்நாடகத்தில் 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை குமாரசாமி வலியுறுத்தல்
கர்நாடகத்தில் 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தினார்.;
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. பெங்களூருவிலும் பரவல் குறைந்துள்ளது. ஆயினும் சில மாவட்டங்களில் பரவல் அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்களின் நலன் கருதி, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும். கொரோனா முதல் அலையின்போது கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அரசின் வரி வருவாய் குறைந்தது.
அவற்றுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கலால்துறை மூலம் மட்டும் 150 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது. ஏழை மக்களின் நலனில் அக்கறை இருந்தால் 1 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
இதற்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி தான் செலவாகும். ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்யும், அரசுக்கு ரூ.10 ஆயிரம கோடி என்பது பெரிய நிதி கிடையாது. சில தேவையற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதியை உடனே நிறுத்த வேண்டும். பெயருக்கு உதவித்தொகையை அறிவிப்பதை விட்டுவிட்டு, நெருக்கடியில் உள்ள மக்களுக்கு அர்த்தப்பூர்வமாக உதவி செய்ய வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.