வடகர்நாடகத்தில் கனமழைக்கு சிறுமி உள்பட 3 பேர் பலி

வடகர்நாடகத்தில் கனமழைக்கு சிறுமி உள்பட 3 பேர் இறந்தனர்.;

Update: 2021-06-04 13:44 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகர்நாடகத்தில் பெய்த கனமழைக்கு சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கலபுரகி மாவட்டம் நெரலகி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்தது. நேற்று காலை வரை மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் போது நேற்று அதிகாலை நெரலகி அருகே ஒரு கிராமத்தில் வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த ஒரு தம்பதி, அந்த தம்பதியின் 7 வயது மகள் நீலம்மா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்த நெரலகி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தம்பதி மட்டும் பலத்த காயத்துடன் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் சிறுமி நீலம்மா இறந்து விட்டாள். அவளது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோல ராய்ச்சூர் மாவட்டத்திலும் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் ராய்ச்சூர் அருகே ஹீஷ்ஷயலா ஹீடா கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (58) என்பவர் தனது வீட்டின் முன்பு நின்றார்.

அப்போது திடீரென அவரை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். இதுபோல தேவதுர்கா தாலுகா இங்கலதா கிராமத்தை சேர்ந்த பூதப்பா (18) என்பவரும் மின்னல் தாக்கி இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து நெரலகி, ராய்ச்சூர் புறநகர், தேவதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்