தடுப்பூசி குறித்து கேட்ட கேள்விக்கு சர்ச்சை பதில்; ‘‘டுவிட் போட்டது நான் அல்ல, கட்சி தொண்டர்’’: மும்பை மேயர் விளக்கம்

தடுப்பூசி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்த விவகாரத்தில், ‘‘டுவிட் போட்டது நான் அல்ல, கட்சி தொண்டர்’’ என மும்பை மேயர் விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2021-06-04 10:35 GMT
சர்ச்சையான பதில்
மும்பை மாநகராட்சி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்க மாநகராட்சி உலகளாவிய டெண்டர் விட்டுள்ளது. இந்த டெண்டருக்கு 9 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன. அந்த நிறுவனங்களின் ஆவணங்களை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் டுவிட்டரில் ஒருவர், கொரோனா தடுப்பூசி உலகளாவிய டெண்டர் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என மேயர் கிஷோரி பெட்னேகரிடம் ேகள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மேயர், ‘உனது அப்பாவுக்கு' என பதில் அளித்து 
இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த டுவிட்டை அழித்து விட்டார். எனினும் அதற்குள் மேயரின் பதில் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. நகரின் முதல் குடிமகனான மேயர், இதுபோன்ற கண்ணியம் அற்ற முறையில் டுவிட்டர் போன்ற பொதுவெளியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதா, சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மேயரின் பதிவுக்கு எதிர்ப்பு தொிவித்தனர்'

மேயர் விளக்கம்

இந்தநிலையில் அந்த டுவிட் விவகாரம் குறித்து மேயர் பதில் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் நடந்த விழாவுக்கு சென்று இருந்தேன். அப்போது எனது செல்போனை சிவசேனா தொண்டர் ஒருவரிடம் கொடுத்து வைத்து இருந்தேன். அந்த தொண்டர் கோபத்தில் அதுபோல பதில் அளித்து உள்ளார். எனினும் செல்போன் எனது கைக்கு கிடைத்தவுடன் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டேன். இதில் இருந்து மிகவும் நெருக்கமானவர்களிடம் கூட செல்போனை கொடுக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக சமூகவலைதளங்களில் சர்ச்சையான கருத்தை கூறி பிரச்சினை ஆனால், தலைவர்கள் அவர்களது அட்மின் (சமூக வலைதள கணக்கு நிர்வாகி) தான் தெரியாமல் அந்த பதிவைபோட்டதாக பழியை போட்டு தப்பித்து கொள்வார்கள். மும்பை மேயர் சற்று வித்தியாசமாக கட்சி தொண்டர் செய்ததாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்