ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல் - டிரைவர் கைது
ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1300 மதுபாட்டில்களை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 14 மூட்டைகளில்; மொத்தம் 1300 ஆந்திர மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையின் புறநகரான திருவொற்றியூரில் விற்பனை செய்வதற்காக மேற்கண்ட மதுபாட்டில்கள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு காரை ஓட்டிச்சென்ற சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சிவகுமார் (வயது37) என்பவரை கைது செய்தனர். மதுபாட்டில்களுடன், சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.