ஊட்டியில் முழு ஊரடங்கிலும் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

ஊட்டியில் முழு ஊரடங்கிலும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தொற்று பாதிப்பு உயரும் அபாயம் இருக்கிறது.

Update: 2021-06-04 00:55 GMT
ஊட்டி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 11-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

முழு ஊரடங்கில் இருந்து மருந்தகங்கள், பால் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள், அத்தியாவசிய தொழிற்சாலைகள், விவசாய பணிகள் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டியில் முழு ஊரடங்கு அமலில் இருந்தும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தினமும் காலையில் பால் வாங்க செல்வதாகவும், மருந்து-மாத்திரைகள் வாங்க செல்வதாகவும் கூறுகின்றனர். 

ஆனால் அவர்கள் நண்பர்களை சந்திக்கவும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று வருகிறார்கள். கொரோனா பரிசோதனை செய்ய செல்வதாகவும் செல்கின்றனர். அவசிய காரணங்களுக்காக செல்கிறவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்களை போலீசார் உறுதிமொழி எடுக்க வைக்கின்றனர். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊட்டி கமர்சியல் சாலை, லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முழு ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அருகே உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருவதால் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் பலருக்கு பரவும் அபாயம் உள்ளது.

அஜாக்கிரதையாக வெளியே சுற்றும் நபர்களால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக மட்டும் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்