கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
கூடலூர், பந்தலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு நடத்தினார்.
அப்போது 1-ம் மைல், நிமினிவயல், வேடன் வயல், பாண்டியாறு, நாடுகாணி, பந்தலூர் அட்டி, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், மக்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதுதான். ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம்.
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மேலும் பரிசோதனைகளும் அதிகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் தங்கள் 13 அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் 14 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது. அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் ஒத்துழைத்தால் கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கூடலூர் மார்னிங் ஸ்டார் தொடக்கப்பள்ளியில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார். மேலும் பந்தலூர் பகுதியிலும் ஆய்வு நடத்தினார்.
இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் தினேஷ், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.