தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சேலத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
எடப்பாடி:
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சேலத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
இரும்பாலையில் ஆய்வு
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில் கூடுதலாக 500 படுக்கைகள் வசதிகள் கொண்ட கூடுதல் கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், மற்றும் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
5 நாட்களில் பணிகள் நிறைவு
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 230 படுக்கைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 270 படுக்கைகள் காலியாக உள்ளன. எனினும் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணியை இன்னும் 5 நாட்களில் முழுவதும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் 1,300 பேர் வரை மாதிரிகள் எடுக்கின்றனர். இதில் கொரோனா தொற்று இருக்கிறது என்று 51 சதவீதம் வரை கணக்கு காட்டுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் 12 சதவீதம் வரை தான் கொரோனா தொற்று இருக்கிறது என்று வருகிறது. இதனால் இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து எந்த இடங்களில் எல்லாம் சதவீதம் கூடுதலாக கணக்கு காட்டினார்களோ? அந்த ஆய்வகத்தில் பாசிட்டிவ் என்று கூறிய சிலவற்றை அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் பரிசோதனை செய்தோம். இதில் கொரோனா தொற்று இல்லை என்று வந்தது. இதையடுத்து சேலத்தில் 2 தனியார் ஆஸ்பத்திரி ஆய்வகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம்
ஊரடங்கு முடியும் வரை மின்சார பராமரிப்பு பணிகள் வேண்டாம் என்று தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் மின்சார வாரியம் செயல்படும் ஒரு துறையாக இருக்கிறது. 100 சதவீதம் இனி மின்தடை இருக்காது. அதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 24 மணி நேரமும் உயர்மின் அழுத்த மின்சாரம் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எந்த ஆஸ்பத்திரிக்கும் மின்தடை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடியில் ஆய்வு
முன்னதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் டாக்டர், செவிலியர்களிடம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து எடப்பாடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கிய மருத்துவ உபகரணங்களை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம், அவர் வழங்கினார். மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து எடப்பாடியை சேர்ந்த நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி அவருக்கு 3 சக்கரசைக்கிளை வழங்கினார். அப்போது கலெக்டர் கார்மேகம், சின்ராஜ் எம்.பி., சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட துணைச் செயலாளர் சம்பத் குமார், நகர செயலாளர் பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.