தங்குமிடம், உணவு வழங்கக்கோரிய மனு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
தங்குமிடம், உணவு வழங்கக்கோரிய மனு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
மதுரை,
மதுரை கே.புதூரை சேர்ந்தவரும், தமிழ்நாடு செவிலியர் சங்க பொருளாளருமான ஆரோக்கியம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
மதுரை முனிச்சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஆண் செவிலியராக பணியாற்றுகிறேன். தற்போது கொரோனா சிகிச்சைக்காக என்னை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுமாறு தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த மாதம் அங்கு பணியாற்றினேன். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், மருந்து வினியோகிக்கும் அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் அங்கேயே தங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கும் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் கொரோனா வார்டுகளில் பணியாற்றுபவர்கள் தினசரி பணி முடிந்த உடன், தங்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் பணிக்கு வருகின்றனர். இதனால் அவர்கள் மூலமாக குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்றவற்றை தவிர்க்க கொரோனா வார்டுகளில் பணியாற்றுபவர்களை அங்கேயே தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் கூடிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கும் அங்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.