கர்நாடகாவில் இருந்து ஈரோடு வழியாக ரெயிலில் மது கடத்திய 4 பேர் கைது; 213 மதுபாட்டில்கள் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து ஈரோடு வழியாக ரெயிலில் மது கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 213 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-03 20:43 GMT
ஈரோடு
கர்நாடகாவில் இருந்து ஈரோடு வழியாக ரெயிலில் மது கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 213 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சோதனை
ஈரோடு ரெயில் நிலையத்துக்கு, மைசூரு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை வந்தது. இந்த ரெயிலில் ஏறி ஈரோடு ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக ஏ-1 மற்றும் எஸ்-9 பெட்டிகளில் பயணம் செய்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களுடைய உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கர்நாடகா மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம் மஜித் ரோடு 5-வது வீதியை சேர்ந்த செரிப் (வயது 28), கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமார் நகரை சேர்ந்த செந்தில் (37) ஆகியோர் என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மதுவை ரெயிலில் கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஈரோடு வழியாக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்த 68 கர்நாடகா மாநில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
இதேபோல், பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில், கர்நாடகா மதுபாட்டில்களை கடத்தி வந்த கர்நாடகா மாநிலம் பங்கார்பேட்டை சுபாஸ் நகரை சேர்ந்த சுதர்சன் (28), ஸ்ரீநாத் (39) ஆகியோரை ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 145 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்