திருவோணத்தில் அரசு மாணவர் விடுதி சமையலர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவோணத்தில், அரசு மாணவர் விடுதி சமையலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-03 20:02 GMT
ஒரத்தநாடு:-

திருவோணத்தில், அரசு மாணவர் விடுதி சமையலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நர்சுடன் காதல்

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி தியாகராஜன் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கணேசன் (வயது 25). கேட்டரிங் படித்த இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். 
அப்போது நர்சிங் கல்லூரியில் படித்து வந்த புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ஆபேல் மகள் புளோரினா(22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசனுக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அடைக்கலபட்டனம் அரசு மாணவர் விடுதியில் சமையலர் வேலை கிடைத்தது. 

ஒரே வீட்டில் தங்கினர்

இதேபோல் புளோரினாவுக்கு கடந்த ஆண்டு(2020) தஞ்சை மாவட்டம் திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் வேலை கிடைத்தது. இதனால் புளோரினா திருவோணத்தில் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு தங்கி இருந்தார். 
இந்த நிலையில் கொரோனா விடுமுறையில் இருந்த கணேசன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தென்காசியில் இருந்து திருவோணத்துக்கு வந்து புளோரினாவுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மதியம் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு புளோரினா  வேலைக்கு சென்று விட்டார். 
தூக்குப்போட்டு தற்கொலை
பிறகு வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, கணேசன் சேலையில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து பதறிப்போன அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணேசனை மீட்டு திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். 
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புளோரினா ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கு இருந்த பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக கணேசனின் தாயார் பார்வதி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்