உடலில் காயங்களுடன் ஏரியில் பிணமாக மிதந்த விவசாயி
விக்கிரமங்கலம் அருகே உடலில் காயங்களுடன் விவசாயி, ஏரியில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரமங்கலம்:
விவசாய நிலத்திற்கு சென்றார்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள குஞ்சுவெளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சாமிநாதன்(வயது 33). விவசாயம் செய்து வந்தார்.
இவர் நேற்று காலை, ஊரில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை அடைத்து வைத்துள்ள இடத்திற்கு சென்று விட்டு வருவதாக, வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள், சாமிநாதனை தேடிச்சென்றனர்.
ஏரியில் பிணம்
இந்நிலையில் ஊரின் அருகே உள்ள கோனார்குளம் என்ற ஏரியில் சாமிநாதன் பிணமாக மிதந்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், சாமிநாதன் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த அவரது குடும்பத்தினர் ஏரியில் இருந்து சாமிநாதனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது அவரது தலை, கை, கால்களில் காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி, சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொலையா?
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சாமிநாதன் எப்படி இறந்தார்?, அவரை யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசிச்சென்று விட்டனரா?, அவருக்கு யாரேனும் எதிரிகள் உள்ளனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.