திருச்சி உறையூரில் சோதனை: மேலும் 21 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
திருச்சி உறையூரில் நடத்திய சோதனையில் மேலும் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி,
திருச்சி உறையூரில் நடத்திய சோதனையில் மேலும் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
கஞ்சா கடத்தல்
கார் ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி உறையூர் கோணக்கரை டாஸ்மாக் கடை அருகே உறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது.
இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த உறையூர் சீனிவாசா நகர் 12-வது குறுக்குத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 24), உறையூர் குமரன் நகர் பேங்கர்ஸ் காலனியை சேர்ந்த அருள் ஆனந்தன் (34), நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த சுள்ளான் என்ற லட்சுமணன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 21 கிலோ கஞ்சா
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருச்சி புத்தூரை சேர்ந்த ஹரிகரன் என்பவரை பிடித்து சோதனை செய்ததில், ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த மேலும் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். மேலும் ஹரிஹரனும் கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 42 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். கஞ்சா கடத்தல் பேர்வழிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார்.
இதுபோல் திருச்சி ராம்ஜிநகர், மில்காலனி உள்ளிட்ட பகுதியில் கஞ்சா விற்றதாக கே.கள்ளிக்குடி ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி தீனதயாளன் (வயது 23) என்பவரை எடமலைப்பட்டி புதூர் ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ராம்ஜிநகர் மில்காலனி பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (27), பரத் (23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3,500 ஆகும்.