1000 மரக்கன்றுகள் நடும் பணி
1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
விருதுநகர்,ஜூன்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திலும் 1000 மரக்கன்றுகளை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று காலை கலெக்டர் கண்ணன் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டியது அவசியமாகும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக வேப்பம், புங்கை, அயன், அரசன், ஆல மரம், இலுப்பை, வேங்கை, ஈட்டி பூவரசு, பாதாம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்று வகைகளை வனத்துறை வழங்கி உள்ளது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களில் இந்த ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். அதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். மேலும் மாணவ, மாணவிகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மாவட்டத்தில் மழை அளவு கூடுவதுடன் வறட்சியையும் தவிர்க்க முடியும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.