நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை

கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-06-03 18:31 GMT
நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொரோனா பாதிப்பு
நாமக்கல் அழகுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜ் (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் துடைப்பம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி யுவராஜூக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 
பின்னர் அவர் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவரை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். இருப்பினும் யுவராஜ், டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மனைவியிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி யுவராஜ் சென்றார். அங்கு உள்ள கழிவறையில் அரைஞாண் கயிற்றால் ஜன்னலில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
கழிவறைக்கு சென்ற யுவராஜ் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கோகிலா அங்கு சென்று பார்த்தபோது யுவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இணை நோயால் அவதிப்பட்டு வந்த யுவராஜ், வலி தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்