பழப்பெட்டிகளுக்கு இடையே வைத்து கடத்தி வந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் என நம்பி போலீசாரிடம் சிக்கிய 2 வாலிபர்கள் கைது

பழப்பெட்டிகளுக்கு இடையே வைத்து கடத்தி வந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் என நம்பி போலீசாரிடம் சிக்கிய 2 வாலிபர்கள் கைது

Update: 2021-06-03 17:27 GMT
திருக்கோயிலூர்

அரகண்டநல்லூர் அருகே உள்ள தபோவனம் சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது அதில் பழப்பெட்டிகளுக்கு இடையே 2 சாக்கு மூட்டைகளில் 240 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து மர்ம நபர் ஒருவர் 2 மூட்டை காய்கறிகளை திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் அவரது நண்பர்களிடம் கொடுக்குமாறு கூறி அவர்களின் செல்போன் நம்பரையும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார்.  

இதையடுத்து போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு மர்மநபரின் நண்பர்களை தொடர்புகொண்டு லாரி டிரைவர் பேசுவதுபோல பெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைகளை எடுத்து வந்து இருப்பதாகவும் அவற்றை வாங்கி செல்லுமாறும் கூறினார்கள். இதை உண்மை என்று நம்பிய அவர்கள் லாரி நிற்கும் இடத்துக்கு வந்தனர். அப்போது அங்கே மறைந்து இருந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருக்கோவிலூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் திருநாவுக்கரசு(வயது 32), சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் நாராயணன்(28) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரிடம் மதுபாட்டில்களை கொடுத்து அனுப்பிய குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மகன் சதீஷ்(32) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். 




மேலும் செய்திகள்