பொள்ளாச்சி நகரில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொரோனா கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி நகரில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொரோனா கண்காணிப்பு அதிகாரி காந்திமதி ஆய்வு செய்தார்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொரோனா கண்காணிப்பு அதிகாரி காந்திமதி ஆய்வு செய்தார்.
ஆய்வு
பொள்ளாச்சி நகரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைதாள்) காந்திமதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில் அவர் நேற்று சரோஜினி வீதியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் வீடு, வீடாக பரிசோதனை செய்யும் விவரங்கள் குறித்த பதிவேட்டை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து சுதர்சன் நகரில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா கவனிப்பு மையம் மற்றும் பஸ் நிலையத்தில் செயல்படும் மொத்த காய்கறி கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள்
காந்தி மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பஸ் நிலையத்திற்கு கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் வாங்கி செல்லும் சில்லறை வியாபாரிகளும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விதிமுறைகள் முறையாக பின்பற்றபடுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் காந்திராஜ், தாசில்தார் அரசகுமார், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் உடன் இருந்தனர்.