கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
கிணத்துக்கடவு
நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோவை புறநகரில் உள்ள கிராம பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்படி கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரி, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் இதுவரை 5 ஆயிரத்து 613 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடவில்லை. இதற்கிடையில் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுகாதாரத்துறையினர் தடுப்பூசியை அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதனை அறிந்த பொதுமக்கள் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்தபடி நின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்களை சமூக இடைவெளிவிட்டு நிற்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்படும். தடுப்பூசி வருவதை பொருத்து செலுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செல்லும் வகையில் கூடுதலாக தடுப்பூசி கேட்டு வருகிறோம் என்றனர்.