வாலிபர் கொலையில் நண்பர் கைது

திருப்பூரில் கொடுக்கல்வாங்கல் தகராறில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-06-03 17:02 GMT
திருப்பூர்
திருப்பூரில் கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் குத்திக்கொலை
திருப்பூர் ராயபுரம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மாலையில் திருப்பூர் சந்தைப்பேட்டை ஏ.பி.டி. ரோட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் முன்பு கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் கல்லால் தாக்கப்பட்ட காயங்களும் இருந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்திய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கொடுக்கல்-வாங்கல் தகராறு
விசாரணையில் சம்சுதீன் அவரது நண்பர்கள் 5 பேருடன் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றது தெரியவந்தது. சம்சுதீனுக்கும், அவரது நண்பர்களுக்கும் ஏற்கனவே பணம்- கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது.
அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். இதில் சம்சுதீனை 5 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது.
நண்பர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கே.வி.ஆர். நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான கார்த்தி (26) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையான சம்சுதீன் மீது திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்